ஆங்கேயொரு கருப்புப்பிண்டம்.
சுற்றியெங்கும் பனிக்கண்டம்.
பெயர் தெரியா அந்தப்
பொருள், மனித அழுகை போல்
ஒலியெழுப்பிக் கொண்டிருந்தது.
அருகில் சென்று அமர்ந்தேன்.
அது பொருளல்ல !
தூக்கியெறியப்பட்ட குழந்தை!
கேட்டேன்.
"உன்னை பெற்றெடுத்த தாய், தந்தை எங்கே?"
"அவர்கள் இறைவனை பிரார்த்திக்கச் சென்றிருக்கிறார்கள்"
என்றது.
அனுதாபமாக நான் பார்க்க,
அந்தக் குழந்தை ஆறுதலாகப்
பேசுகின்றது.
"நான் இந்த பனிமழையில்
சந்தோஷமாகத் தானே
நனைந்து கொண்டிருக்கின்றேன். !
இந்த குளிர்விக்கும் பனித்துளிகளில்
தெரியும் என் புன்னைகைத்துளியின்
விம்பத்தை பாருங்கள் !
அவர்கள் எனக்கு அணிவித்திருக்கும்
வெள்ளைநிறப் பனியால் நெய்யப்பட்ட
ஆடையின் அழகினைப் பாருங்கள் !
அது மரணத்தை விடவும்
அதிகளவான இன்பத்தை
அளிக்கின்றது ! அடடா !
அது மட்டுமா....
அவர்கள் எனக்கு அழகாகப் பாடவும்
கற்றுக் கொடுத்திருக்கிறார்கள் !
என் இசை தானே உங்களையும்
இங்கே இழுத்தது !
நான் ஆடிப்பாடி ஆனந்தமாய்த்
தானே இருக்கின்றேன் !
அதனால் இப்போது அவர்கள்
சுவர்க்கம் கேட்டு,
இறைவனை சந்திக்கப்
போயிருப்பார்கள்.
நான் காத்திருக்கின்றேன் !
அவர்கள் சுவர்க்கத்தைப்
பெற்று வந்து, அங்கே தவழும்
என்னைத் தூக்கி முத்தமிடுவார்கள்
என்று......"
(©"Songs of Experience - Chimney Sweepers" by William Blake)
தமிழில் : இளவரசன்

No comments:
Post a Comment