நான்
வெள்ளிநிறத்தாலானவன்!
வெள்ளையகத்தாலானவன்!
எனக்கென்று எந்த
விதிகளும் இல்லை!
எதிரில் எவருக்கும்
சதிகள் செய்வதுமில்லை!
இருப்தை இருப்பதாய்க் காட்ட
கருப்பனைக் கருப்பனாய்க் காட்ட
எதையும் எதிர்பார்ப்பதுமில்லை.
பொய்களை நான் செய்யாதபோது
மெய்யானவனாகவே
நான் வாழும் போது
விரக்தியால் சிலருக்கு
அரக்கனாய்க் கூடத் தெரிவேன்.
இருந்தும்
எனக்குப் பெருமை,
உண்மை மட்டுமே பேசும்
எந்தன் பொறுமை!
கடவுள் என்
கண்களுக்குள் கலந்திருக்க;
நான்கு மூலைகளிலும் ஒளிந்திருக்க;
நான் உண்மைகளைத் தவிர
உலகுக்கு வேறு எதனைக் கூறுவேன்?
எந்நேரமும் எனக்குள்
அந்த எதிர்சுவர்.
அது என்னையே பார்த்துக்
கொண்டிருப்பதால் என்னவோ
ஆழமாக அதனை
நேசிக்கின்றேன்.
என் இதயம் இதுவா என்றும்
யோசிக்கின்றேன்
இருந்தும் காதலர்களைத் தான்
இந்த உலகம் வாழ
விடுவதில்லையே.
முகம்பார்க்க வரும் அகம்பாவிகள்
என் சிவப்பு நிற சுவரை
கறுப்பு நிறமாக்கிவிட்டுச்
செல்கின்றனர்.
மேலும், நான் ஒரு
நதியைப் போன்றவன்!
சதா ஒருத்தி என்னில்
அவளைத் தேடுகின்றாள்.
அவளை அப்படியே
அவளிடம் காட்டுகின்றேன்.
அவளோ இல்லாத
அலங்காரம் தேடி
பொய்யைப் புறந்தள்ளும்
சந்திரனையும்
மெழுகுவர்த்தியையும்
நாடிச் செல்கின்றாள்.
இருந்தும் திருப்தியில்லாது
திரும்பத் திரும்ப அவள்
என்னிடம் தான்
வருகின்றாள்.
தேம்பத் தேம்பத் அவள்
அழுகின்றாள்.
விழித்துளிகளால் நனைகிறது
என் உடல்.
என்னைக் காயப்படுத்துகிறாள்.
காலமெல்லாம் நான் தான்
அவளுக்கு வேண்டியவன்
என்பதை உணராமல்..
வெளிச்சமான காலைப் பொழுதிலும்
அவள் முகம் இருளாகத் தானே
இருக்கின்றது நான் என் செய்வேன்...
சிறுமியாய் அவளிருக்க நான் பரிசானேன்
கிழவியாய் அவள் மாற நான் என் செய்வேன்..
காலம் அவளை நீருக்குள் மீனாய்
மூழ்கடித்துவிட்டது.
இறந்தால் வெளியேறுவாள்.
வெளியேறினால் இறப்பாள்.
(©"Mirror" - Sylvia Plath)
தமிழில் - Imaz



No comments:
Post a Comment