நான் பேசுகிறேன். - மழை மேகம்

பொழியும் மேகத்தில் பொழுதைக் கழிக்கலாம் வாரீர் !

Thursday, 22 November 2018

நான் பேசுகிறேன்.



பார்த்ததையெல்லாம் பற்றி,
பாருலகம் சுற்றி,
தற்பெருமை போற்றி,
கற்பனைகள் கொட்டி,
ஒன்றுசேர்த்த கவிதையல்ல
இது!
நான் என்ற இரண்டு எழுத்து
நான் என்றால் யாரென்று 
எனக்கே புரியவைக்கும்
ஒரு சில கருத்து!
இதுவரை என்னை புரிந்தவர் எவருமில்லை.
சில நேரம் என்னால் கூட முடிவதுமில்லை...

பலரால் புறக்கணிக்கப்படும்,
சிலரால் மறக்கடிக்கப்படும் நான், 
இன்னும் வாழ்ந்து கொண்டு தான் 
இருக்கிறேன்.
கொஞ்சம் கொஞ்சமாய் நாளும் 
கொலை செய்யப்பட்டு
இறக்கிறேன்!
கொலைக்குற்றத்தில் தண்டிப்பது 
யாரை..?
எங்கு சென்று எவ்வாறு 
முறையிட....
சிறையிலிடப்பட வேண்டியவர்
யாரென்று, நான் கூற, 
யாரும் புரிந்து கொண்டால், 
நான் ஏன் கொலை செய்யப்படப் 
போகிறேன்.....?

பிடித்தவர்களும், கொஞ்சம் 
படித்தவர்களும்., என் மனதை 
பிடித்திருந்தால், மெல்ல திறந்து 
படித்திருந்தால்..
இப்போது இந்த கவிதையை யாரும் 
படித்திருக்க மாட்டார்களே..?

உரிமையானவர்களால் 
உரிமைகள் இழக்கப்பட்டு..
உறவுகளால் 
உதாசீனப்படுத்தப்பட்டு..
நடிக்கத்தெரிந்த சில 
நட்புக்களால் நசுக்கப்பட்டு..
அன்புகாட்ட வந்தவர்களால் 
அடிமையாக்கப்பட்டு...
அழகான பொய்களால் 
அடிமுட்டாளாக்கப்பட்டு.... 
பணவலையினுள் 
பணயக்கைதியாக்கப்பட்டு...
மனவலியுடன் நெஞ்சம் 
பாதியாக்கப்பட்டு.....
ஒருபகுதி ஒரு மூலையிலும்... 
மறுபகுதி புறத்தே ஏதோ வேலியிலும்
தூக்கியெறியப்பட்டு...
நான் இன்றும் தேடிக் கொண்டு 
தான் இருக்கின்றேன்...!
அந்த நெஞ்சம் முழுமை பெறதா?
நிம்மதியால் நிரப்பப்படாதா? என்று...
நோக்கமின்றி பிறந்தேனோ நான் 
என்ற சந்தேகங்கள் 
சுமந்து வரும் ஒரு 
சில நிகழ்வுகள்,
எத்தனை இரவுகளை 
தூக்கமின்றி தொலையச் 
செய்திருக்கிறது...
நான் கூட அறிய மாட்டேன்..!

நான் வெறும் 
கற்பனையல்ல..!
என் கவிதைகளும் வெறும் 
கதைகளல்ல..!
கற்பனைக் கண்ணாடியணிந்தே,
என்னைப் பார்த்தவர்களுக்கும்,
பார்ப்பவர்களுக்கும் 
நான் வெறும் கல்லாய் தான் 
இன்னும் தெரிகிறேன்..!

அவர்கள் பார்வைக்கு  
கல்லாய் இருக்கும் 
இந்த நான் கூட சில சமயம் 
மானுட வேடம் உடுத்துகிறேன்?
மனிதனாய் மதிக்கப்பட்டு அல்ல..
மனிதனால் மிதிக்கப்பட்டு..

அதிகம் பேசுபவனாகவும், 
அப்பாவியாகவும், 
தப்பானவனாகவும், 
அர்த்தமற்றவனாகவும், 
அசிங்கமானவனாகவும், 
அழகற்றவனாகவும், நெஞ்சில்
அழுக்குற்றவனாகவும், யாருக்கும்
பிடிக்காதவனாகவும், அதிகம் 
படிக்காதவனாகவும், 
பதவியற்றவனாகவும்,  
பணமற்றவனாகவும், 
பிச்சைக்காரனாகவும், மனோ
இச்சைக்குட்பட்டவனாகவும், 
சுயநல வாதியாகவும், 
சுகபோகியாகவும்
மூடனாகவும், 
முட்டாளாகவும், தலைக்கணம் 
பிடித்தவனாகவும், என்றும் 
நடித்தவனாகவும், 
பொய்யனாகவும், சிறு 
பைய்யனாகவும், 
ஆசைகளற்றவனாகவும், 
உரிமையற்றவனாகவும்,
உணர்வற்றவனாகவும், ஏன் 
உயிரற்றவனாகவும் கூட 
நான் பல உடைகள் கொண்டு 
உடுத்தப்படுகிறேன்.!
உள்ளத்தில் வாழும் 
அந்த "நான்" என்பவனின் மானம் காக்க......

எப்படியிருந்தாலும் அதற்கொரு 
பெயர் வைத்திடும் 
இந்தநாலுபேர் வாழும் உலகில்
இந்தநானும் எப்படித்தான் வாழ....

உணர்வுகளால் நான்
உரையாடினால்...
உடனே சிலர்,
உடலில் காயங்கள் நீ
கொண்டிரவில்லை...
உடையில் கந்தல்கள் நீ
கொண்டிரவில்லை..
வேஷம் எதற்கு.. உன்
வெளித்தோற்றம்
அறிகிறோம்..! என்கிறனர். 

வெளியிலிருந்தே 
வேடிக்கை பார்த்து,
கூறும் அந்தச் சிலருக்கு 
தெரியாது தான்..!
உள்தோற்றம் கொண்ட 
உள்ளத்தையும்... அதனுள்ளே 
நாளும் வெடித்துச் சிதறும் இரத்த 
நாளங்களையும்...
ஓட்டைகள் விழுந்த;
தூசுகள் படிந்த;
அங்கே கட்டப்பட்ட 
மனக்கோட்டைகளையும்...
அந்த கோட்டைகள்
உளிகளும், சுத்திகளும் கொண்டு
இனம்தெரியாதவர்களால் 
நாளும் உடைக்கப்பட்டுக் 
கொண்டிருக்கின்ற 
செயல்களையும்..
தடுக்க முற்படும் நானே 
தடுமாறி விழும் நிலைகளையும்...

ஆசைப்படுவது எல்லாவற்றையும் 
அனைவரும் அடைவதில்லை.
ஆசைப்படுவதில் ஒன்று கூட எனக்கு
அமைவதுமில்லை!
அந்தளவு என்னிடம் 
செல்வமும் இல்லை!
அதனால் ஆசைகள் கூட எனக்கு 
இப்போது இல்லை!
அம்மாவிடம் அடிக்கடி கேட்பேன்... 
"ஆசை பணக்காரர்கள் மட்டும் பயன்படுத்தும் வார்த்தையா'ம்மா... ?"

மனம் கொண்டு வாங்கும் பலதை 
பணம் கொண்டு வாங்க முடியாது 
என்பர்!
உண்மையென்றிருந்தேன்.
அது கூட வெறும் வார்த்தையாய் 
போனது 
என் வாழ்வில்....

வலிகளின் பின்பு தான் நல்ல
வாழ்க்கை இருக்கிறது.!
வளைவுகளின்றி எங்கு 
நதியும் இருக்கிறது?
படிப்பினைகளை 
துடுப்புக்களாக்கி,இந்த 
வளைந்த நதியில் 
வள்ளம் செலுத்தி 
இறுதியில் சமுத்திரம் சென்று 
பார்த்திடுவேன். - இந்த
தனியொருத்தன் வாழ்ந்திட,  
தனியாய் ஒரு சிறு தீவு கூட 
இருக்காதா.. என்ன..!

அதற்காய் நான் 
இனி செய்யப்போவது.....

"என் வரலாற்றை 
என் கைப்பட நானே 
எழுதப்போகிறேன்!!
எந்த எழுத்துப் பிழையுமின்றி...!"

©Imaz


No comments:

Post a Comment