அந்த ஜன்னலோரக் காலை - மழை மேகம்

பொழியும் மேகத்தில் பொழுதைக் கழிக்கலாம் வாரீர் !

Tuesday, 20 November 2018

அந்த ஜன்னலோரக் காலை


ஏதோவொரு ஏரிக்கரையோரம்
ஏதுமில்லா சேரிக்குடியொன்றின் ஓரம்
ஒய்யாரமாய் சிரித்துக் கொண்டே நிற்கிறது.
ஒளிவீசும் ஒருமாளிகை.
ஒருநாள் விருந்தாளியாக 
நான் அங்கு செல்ல;
நிழற்படங்களை எடுக்க
ஜன்னலை திறக்கிறேன்.
ஜன்னலோ கேமராவை
முந்திக் கொண்டு 
நிஜப்படங்களையே 
படம்பிடித்துக் காட்டிவிடுகின்றது.

பட பட'வென்று ஆண்கள் 
வேலை செய்ய புறப்படும் 
அந்தக் காலையில் 
தட தட'வென்ற தாளத்தில் 
சப்தமிட்டுச் சிரிக்கின்றது.
'அவசரமாய் பெண்கள் உணவு 
பரிமாறுகையில் தட்டுக்கள் போடும் சத்தம்'


கொஞ்சம் முன்னோக்கி
கண்ணைச் செலுத்த
வளைந்து நெளிந்து,
விளிம்புகள் உடைந்து,
உள்ளே குடைந்து,
செந்நீரும் புகுந்து,
பரிதாபமாகிப் போன பாதையொன்று 
புன்னகைக்கின்றது
என்னைப் பார்த்து......

அங்கிருந்து கொஞ்சம் தொலைவில் 
பனிகாயாத அந்தப் பொழுதில்
பாதையில் சில பணிப்பெண்கள்,
பணிந்து பயந்து பணக்கார வீட்டு 
இராணிக்கு விடியற்காலை வரும்வரை
வாயிற்காதவடியிலேயே
வாய்மூடிக் காத்திருக்கின்றனர்.
வாயில் வெறும் நுன்சிரிப்புடன்.....

வேகமாய் வாகனம் செல்கையிலோ 
சேற்றில் குளித்த வீதி 
சேமித்து வைத்திருக்கும் 
செந்நிறநீர் என்னிடம் வரை 
வருகின்றது.
அவ்வீதி முனையில் 
அகம் சுளித்தும், முகம் சுளித்தும்
பலர் செல்ல 
மலர் போன்ற சிறுபெண் 
கண்ணில் நீரும்
காற்ச்சட்டையில் சேறும் 
பூசிக் கொண்டு மெளனமாகவே 
செல்கிறாள்.
பூவிதழில் புன்சிரிப்பை மட்டும் ஏந்திக் கொண்டு......

இவ்வாறு புன்பட்ட இவர்களும் 
புன்னகைத்துக் கொண்டுதான் 
இருக்கின்றார்கள்.
எதிர்பார்ப்பின்றிய அதனை 
எதிரில் ஏற்கவும் யாருமில்லாது,
அது அலைந்து திரிந்து 
கூறை முகடுகளிலும் தவழ்ந்து 
மேலே அண்ணார்ந்து 
வானிலே சேர்ந்துவிடுகின்றது.

(©"Morning At The Window" - T.S Eliot)

தமிழில் - இளவரசன்

No comments:

Post a Comment