சிறைப்பட்ட சிட்டுக்கள் - மழை மேகம்

பொழியும் மேகத்தில் பொழுதைக் கழிக்கலாம் வாரீர் !

Tuesday, 20 November 2018

சிறைப்பட்ட சிட்டுக்கள்


என் தாயிறந்த பின்பு
தந்தையும் தூக்கியெறிந்தான்.
சரியாய் அழக்கூடத் தெரியாத வயதில்
புகைக்கரியாய் மாறிப்போனது
என் வாழ்க்கை.

அங்கே, என்னைப் போல்
இன்னுமொரு சிறுபையன்
அவன் பெயர் தாமு..!
செறிந்து வளர்ந்த அவன்
சுருளிமுடியை வெட்டி
எறிந்து விட்டனர்.
அழுது கொண்டே இருந்தான்
தலையில் போடப்பட்ட வழுக்கையுடன்
தரையில் போடப்பட்ட சிறுமீனாய்...
அறிவுரையளித்தேன்.
"அழாதே!  இனியுன்
அழகான முடியினில் தான்
அழுக்குப் படியாதே..."



அது ஒரு ஆழ்ந்த இரவு
அவன் விழிகளை சூழ்ந்தது ஒரு கனவு.
அவனும் அவன் போல்
ஆயிரம் குழந்தைகளும்
ஆழ்ந்த இருட்டறைக்குள்
அறையப்படுகின்றனர்.
ஆம், அவைகள் "சவப்பெட்டிகள்".

திடீரென வானவர் வந்து சேர்கிறார்.
அறைகளைத் திறந்து அவர்களை
விடுதலை செய்கிறார்.
அவர்கள் விரிக்கப்ட்ட
பச்சைப் புல்வெளிகளில்
சிரித்து மகிழ்ந்து துள்ளி
விளையாடுகின்றனர்.
ஆற்று வெளியிலும்,
ஞாயிற்று ஒளியிலும் குளித்து
வேற்று உடல் பெறுகின்றனர்.

கரியும், கனத்த சுமையும்
ஏற்ற உடல்கள்
வெண்மையாகவும் வெறுமையாகவும்
மாற்றப்படுகின்றன.

வானவர் தாமுவை அழைத்து..
" இவ்வாறு அனைத்தும்
நீ பெறுவாய்.
கடவுளின் குழந்தையாவாய்.
வீணாய் ஆசைளால் ஏங்க மாட்டாய்.
நல்ல பையனாகவே
என்றும் நீயிருந்தால்..."
என்றார்.

தாமு கண்விழித்தான்.
நாமும் கண்விழித்தோம்.
இருளோடு நாம் எழ, அவன்மட்டும்
அருளோடு எழுந்தாற் போல்
அத்தனை மகிழ்ச்சியாய் இருந்தான்.
துன்பத்தையும் இன்பமாக
ஏற்றுக் கொள்ள துணிவிருந்தால்,
துன்பமே தன் பெயரை மறந்துவிடும்.
(©"Songs of Innocence - Chimney Sweepers" By William Blake)

தமிழில் - இளவரசன்

No comments:

Post a Comment